Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  05-01-2021

இன்றைய தியானம்(Tamil)  05-01-2021

ஆயத்தமா? 

“...யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்... இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்....” – ஏசாயா 6:8 

தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள டோனாவூர் என்ற கிராமத்திற்கு வந்து வல்லமையான ஊழியம் செய்தவர் மிஷனெரி ஏமி கார்மைக்கேல் அம்மையார். அவர்களை இந்தியா வரச் செய்தது எது தெரியுமா? அவர்கள் கண்ட தரிசனம் தான்! அந்த தரிசனத்தில் ஒரு அகன்ற பாதையின் இரு பக்கங்களிலும் பள்ளம் காணப்பட்டது. அது ஆழமான குழி அல்ல. முடிவே இல்லாத பாதாளம். ஏராளமான பேர் அந்தப் பாதையில் நடந்து வந்து கால் தவறி “ஐயோ” என்ற கூக்குரலுடன் விழுவதைப் பார்த்தார்கள். அவர்களைக் கூர்ந்து பார்த்தபோது அவர்கள் கண் இருந்தும் குருடராய் வழியை அறிய முடியாதவர்களாய் இருக்கக்கண்டார்கள் ஏமி. இந்த தரிசனம் கண்டதும், தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, இதோ அடியேன் இருக்கிறேன், நான் வருகிறேன் என்று ஏமி கார்மைக்கேல் தன்னை அர்ப்பணித்து மிஷனெரியாக இந்தியா வந்தார்கள். 

அப்போஸ்தலர் நடபடிகளிலே வாசிக்கும்போது பிலிப்பு என்பவர் சமாரியா பட்டணத்தில் இயேசுவை அறிவித்து, ஜனங்களுக்கு இயேசுவின் நாமத்தினால் அற்புதங்களை செய்தார். இதனால் அந்தப் பட்டணத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டானது. இந்த சமயத்தில் ஆவியானவர் அவரை நீ வனாந்தரத்துக்குப் போ என்று சொன்னார். ஐயோ, ஆண்டவரே, வனாந்தரத்திற்கா? அங்கே யார் இருப்பார்கள்? என் நிமித்தம் மிகுந்த சந்தோஷமுண்டான இந்த பட்டணத்திலேயே ஊழியம் செய்கிறேனே என்றெல்லாம் யோனாவைப் போல் சொல்லாமல் உடனே கீழ்ப்படிந்து அந்த வறட்சி பகுதிக்குச் சென்றார். அங்கு எத்தியோப்பியா தேசத்து மந்திரிக்கு நற்செய்தி அறிவித்ததால், அந்த மந்திரி மூலமாய் எத்தியோப்பியா தேசத்திற்கு சுவிசேஷம் சென்றது. பின்பு பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு செசரியா வரும் வரையில் நற்செய்தி அறிவித்துக் கொண்டே வந்தார். 

தேவபிள்ளைகளே! உடனடியான கீழ்ப்படிதலுக்கும் தாமதமான கீழ்ப்படிதலுக்கும் வித்தியாசம் உண்டு. ஏமிகார்மைக்கேல் அம்மையார் அர்ப்பணித்து தமிழ்நாட்டிற்கு வந்ததால் அநேக பெண்களும் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர். பிலிப்பு தன்னை வறட்சியின் கஷ்டத்திற்கு விட்டுக் கொடுத்தார். உங்களால் உங்கள் உறவினர்களும் நண்பர்களும் பக்கத்து வீட்டாரும் கிராமத்தாரும் நரகத்திற்கு செல்வதிலிருந்து காப்பாற்றப்படுவார்களா? நீங்கள் வேதத்தைப் படிக்கிறவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் வேதத்தின் மைய நாயகன் இயேசுவைப் பற்றி அவர்களுக்கு எவ்வளவு தெரியும்? எனக்கெல்லாம் அழைப்பு இல்லையென்று சொல்லுவீர்களென்றால் மத்தேயு 28:18, 19, 20 ன் மூலம் அழைப்பு விடுக்கிறார். உலகமெங்கும் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்று. அழைப்பிற்கு செவிகொடுங்கள். உங்களால் அநேகர் வெளிச்சம் பெறட்டும். தேவ திட்டமும் நிறைவேறட்டும். ஜனங்கள் மத்தியில் நித்திய சந்தோஷம் உண்டாகட்டும். 
-    Mrs. சூசன்னாள் மேத்யூ

ஜெபக்குறிப்பு:
புதிதாக இந்த நாட்களில் நம்முடைய தின தியானத்தை வாசிக்கும் நபர்கள் தேவனுடைய கரத்தில் கருவியாக பயன்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)